அப்பா – திரைவிமர்சனம்!

அப்பா – திரைவிமர்சனம்!

நாடோடிகள் நிறுவனம் தயாரிப்பில், எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வெளியீட்டில் சமுத்திகரக்கனி நடித்து இயக்கியிருக்கும் படம் ‘அப்பா’. தான் இயக்கிய படங்களிலேயே சிறந்த படம் ‘அப்பா’தான் என்று நினைக்கும் சமுத்திரக்கனிக்கு இப்படம் சிறந்த படமாக அமைந்ததா என்று பார்ப்போம்?

வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நான்கு அப்பாகள். அவர்கள் எப்படி தங்களது பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதுதான் ‘அப்பா’வின் ஒரு வரி கதை. கடுமையான போட்டி உலகத்தால் பாதிக்கபட்டு தன் மகனையும் அந்த உலகத்தில் தினிக்கும் ஒரு அப்பா. உலகில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அது உனக்கு தேவையற்றது என்று சொல்லி உளவியல் ரீதியாக தன் மகனை தனிமை படுத்தும் ஒரு அப்பா. நீ பிறந்தது சுதந்திரமாக பறப்பதர்க்கு, நீ பறக்க என்ன உதவி வேண்டுமோ கேள் என்று சொல்லும் ஒரு அப்பா. படிக்க வைப்பது நமது கடமை, படிப்பது பிள்ளைகளின் கடமை என்று மகளை படிக்க வைக்கும் இன்னொரு அப்பா.

இந்த நான்கு அப்பாக்களும் அவர்கள் பிள்ளைகளை எப்படி வளர்கிறார்கள், சமுதாயத்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன என்பது தான் இந்த அப்பா படத்தின் கதை. இந்த நான்கு அப்பாக்களில் நீங்கள் யார் என்பது ‘அப்பா’ எழுப்புகிற கேள்வி. அது ஏற்படுத்துகிற அதிர்வில் ஒவ்வொரு அப்பாவும் ஒரு கணமேனும் உறைந்துபோகும் சாத்தியம் நிறையவே இருக்கிறது.

அப்பா திரைப்படத்தில் அப்படியொரு களம்… அப்படியொரு கனம்… உலகத்திலேயே சிறந்த அப்பா நான்தான் என்று கர்வம் கொண்டிருப்பவர்களைக் கூட ‘இவர் அளவுக்கு நாம் இல்லையே’ என்று சற்றே குற்றஉணர்ச்சி கொள்ள வைக்கிற அற்புதமான அப்பாவாக சமுத்திரக்கனி. அவர் ஏற்று நடித்திருக்கும் தயாளன் கதாபாத்திரம் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய அபூர்வமான அப்பா.

மகனை ப்ளே ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிற மனைவி. வீட்டைவிட குழந்தை விளையாட சிறந்த இடம் எது? விளையாடுகிற வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாமே என்கிற சமுத்திரக்கனியை படுத்தி எடுக்கிறார் அவரது மனைவி. வேறு வழியில்லாமல் மனைவி சொல்லும் பள்ளியில் மகனை சேர்த்தால்…. அந்தப் பள்ளியின் செயல்பாடுகள் சமுத்திரக்கனியை கடுப்பாக்குகிறது. உடனே மகனை அரசுப்பள்ளியில் சேர்க்கிறார். அதனால் கோபித்துக் கொண்டு தன் அப்பா வீட்டுக்குப்போய்விடுகிறார் அவரது மனைவி. தான் விரும்பியபடி தன் மகனை தன்னம்பிக்கையாளனாக வளர்க்கிறார் சமுத்திரக்கனி.

அதே நெய்வேலியில் பக்கத்துவீட்டில் குடியிருந்த தம்பி ராமய்யா இன்னொரு அப்பா. குழந்தை கருவான கணமே, அந்தக் குழந்தை எல்.கே.ஜி. எங்கே படிக்க வேண்டும்? பத்தாம் வகுப்பில் எவ்வளவு மார்க் வேண்டும்? ப்ளஸ் டூவில் எந்த ஸ்கூலில் படிக்க வேண்டும்? டாக்டராகி… அமெரிக்காவில் வேலைபார்த்து… கோடிக்கணக்கில் சம்பாதித்து…. என்று கனவிலேயே வாழும் தம்பிராமய்யா, அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடன் கூட அண்டவிடாமல் எந்நேரமும் மகனை படி படி என்று கொடுமைப்படுத்துகிறார். உச்சகட்டமாக, ப்ளஸ் டூவில் ஸ்டேட்ஃபர்ஸ்ட் வர வேண்டும் என்ற வெறியில் ‘நாமக்கல் நரகத்தில்’ தள்ளுகிறார்.

அப்பாவின் புரோகிராம்படி இயங்குகிற ரோபோவாகவே மாறிப்போன அந்த சிறுவனுக்கு அங்கே நேர்கிற முடிவு…. தம்பிராமய்யாவை மட்டுமல்ல, நாமக்கல் பள்ளிகளில் தன் பிள்ளைகளை படிக்க வைத்த ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் செருப்படி. ‘இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு வந்துடணும்’ என்பதையே வாழ்க்கையின் மந்திரமாக வைத்திருப்பதோடு, அதையே தன் மகனுக்கும் சொல்லி வளர்க்கிற நமோ நாராயணன் மற்றொரு அப்பா.

அவர் சொன்னதுபோலவே அவரது மகனும் இருக்கிற இடம் தெரியாமலே அதாவது வயதுக்கேற்ற வளர்ச்சியில்லாமலேபோய் விடுகிறான். படிப்பிலும் மக்குப்பிள்ளையாகிப்போன அவனுக்குள் இருக்கும் திறமையை…. கவிஞனை அடையாளம் கண்டு கொண்டு, அந்த சிறுவனின் தன்னம்பிக்கையை தட்டி எழுப்புகிறார் சமுத்திரக்கனி. பேச்சில்… செயலில்… காட்சிக்கு காட்சி சமுத்திரக்கனியின் தயாளன் கதாபாத்திரம் உச்சம் தொடுகிறது.

எந்தவொரு கேரக்டராக இருந்தாலும் அதில் சமுத்திரகனி குறைகூற முடியாத நடிப்பை வழங்கிவருகிறார். அந்த வகையில் இதில் பொறுப்புள்ள ஒரு அப்பாவாக வாழ்ந்துள்ளார். தவறான முடிவு எடுக்கும் மனைவியை அனுசரித்து போகும்போதாகட்டும், காணாமல் போன மகனை தேடி அலையும்போதாகட்டும் சமுத்திரக்கனி மனத்தில் அழுத்தம் திருத்தமாக பதிந்து விடுகிறார்.

சமுத்திரகனியின் மகனாக வரும் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், தம்பி ராமையாவின் மகனாக வரும் ராகவ், நமோ நாராயணின் மகனாக வரும் நாசாத், திண்டுக்கல் அலெக்ஸின் மகளாக வரும் காபிரெல்லா, தந்தையை இழந்த மாணவியாக வரும் யுவஸ்ரீ என படத்தில் நடித்துள்ள அத்தனை குழந்தைகளும் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இவர்களில் படத்தின் ஆரம்பம் முதல் காமெடியில் கலகலக்க வைத்து இறுதியில் தன் கவிதை தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் அனைவரையும் கண் கலங்க வைக்கும் சிறுவன் நாசாத்தை யாரும் மறக்க மாட்டார்கள்.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் தம்பி ராமையா சில இடங்களில் ஓவரான நடிப்பை வழங்கி நம்மை கொஞ்சம் சோதிக்கிறார். கெஸ்ட் ரோலில் வரும் சசிகுமார், மற்றும் வேலா ராமமூர்த்தி, விநோதினி, ப்ரீத்தி, திலீபன், ஆதிரா ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும், ரமேஷின் படத்தொகுப்பும் ‘அப்பா’வுக்கு கூடுதல் தரத்தைக் கொடுத்திருக்கின்றன.

மக்களின் பலவீனத்தை பணமாக்கும் ப்ளே ஸ்கூல், அரசுப்பள்ளிகளின் அருமை, நாமக்கல் பள்ளிகளில் நடக்கும் கொடுமை என பல உண்மை சம்பவங்களை படமாக்கியதற்காகவே சமுத்திரகனியை பாராட்டி ஆகவேண்டும். மொத்தத்தில் பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பள்ளிகளின் செய்லபாடுகளைக் குறித்தும் விளக்கமாக கூறும் இந்த ‘அப்பா’வை அனைவரும் கொண்டாடலாம்.

Related posts