ஜாக்சன் துரை – திரைவிமர்சனம்!

ஜாக்சன் துரை – திரைவிமர்சனம்!

பரபரப்பாக பேசப்பட்ட ‘பர்மா’ படத்திற்கு பிறகு தரணிதரன் எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் ‘ஜாக்சன் துரை’. சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், யோகிபாபு என்று ஒரு பெரும் பட்டாளத்துடன் வெளிவந்திருக்கும் ஜாக்சன் துரை எப்படி என்று பார்ப்போம்?

கதைப்படி, பாழடைந்த பிரிட்டிஷ் பங்களா ஒன்றில் பேய் இருப்பதாக நம்பும் அயன்புரம் மக்கள் இரவு 9 மணிக்கு மேல் ஊரில் நடமாடவே பயந்து நடுங்குகிறார்கள். மக்களின் இந்த பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊர் பெரிய மனிதனின் மகளான பிந்து மாதவி, போலீஸில் இதுபற்றி புகார் கொடுக்கிறார். இதனை விசாரிக்க வெட்டி பந்தாவாக ஊரை சுற்றிவரும் போலீஸ் எஸ்.ஐயான சிபிராஜை அனுப்பி வைக்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

அங்கு போகும் சிபிராஜ், பிந்து மாதவை கண்டதும் காதலில் விழுந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்க செல்ல அதேநேரம், அவருக்கு போட்டியாக பிந்து மாதவியின் முறைப் பையனான கருணாகரனும் பிந்து மாதவியைப் பெண் கேட்டு வருகிறார்.

இதனால் பிந்து மாதவியை யாருக்கு திருமணம் செய்துவைக்கலாம் என்று முடிவு செய்ய, ‘‘யார் பிரிட்டிஷ் பங்களாவுக்குச் சென்று, ஒரு வாரம் தங்கிவிட்டு உயிருடன் திரும்பி வருகிறார்களோ… அவருத்தான் என் மகள்’’ என கண்டிஷன் போடுகிறார் பிந்துமாதவியின் அப்பா. உடனே தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அந்த பங்களாவிற்கு செல்கின்றனர் சிபியும், கருணாவும். அதன் பிறகு என்ன நடக்கிறது? உண்மையில் அங்கு பேய் இருக்கிறதா… இல்லையா? இருவரில் உயிருடன் திரும்பியது யார்? என்பதே ‘ஜாக்சன் துரை’யின் மீதிக்கதை.

சிபிராஜைப் பொறுத்தவரை இப்படத்தில், அவர் நாயகனாக பெரிதாக எதையும் செய்யும் அளவிற்கான கதாபாத்திர வடிவமைப்பு இல்லை. இருந்தாலும் தன்னால் முடிந்தளவு கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பிந்து மாதவிக்கு ஏன் இந்த நிலைமை? என்று தெரியவில்லை. படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவரை பார்த்த ஞாபகம். அதன் பிறகு ஆளையே காணோம். இருந்தாலும் அவர் வரும் காட்சிகளில் அழகாக இருக்கிறார். மகாநதி சங்கரும் இருக்கிறார். அவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

சத்யராஜ் ஃப்ளாஷ்பேக்கில் ஆக்ரேஷமாக காட்டப்பட்டு, நடப்பு கதைக்களத்திற்குத் திரும்பும்போது காமெடியாக்கப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இப்படி ஒரு வேடத்தில் நடத்ததற்காகவே அவரை பாராட்டலாம்.

மொத்த படத்தையும் தாங்கி நிற்பது இரண்டே பேர்தான். ஒருவர் யோகி பாபு, இன்னொருவர் கருணாகரன். இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகளுக்கே தியேட்டரில் சிரிப்பலைகள் எழுகின்றன. முதல்பாதி முழுக்க இவர்கள் இவரின் ஆட்டம்தான். சின்னச் சின்ன காமெடிகள் மூலம் யோகி பாபுவும், படம் முழுக்க கருணாகரனும் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக “நானும் அப்ப இருந்து பார்த்துகிட்டே இருக்கேன்.. முதுக சொரிஞ்சிகிட்ட இருக்க… நீ முன்னாடி வா” என்று குட்டிப்பேயை கருணாகரன் இழுக்கும் போது தியேட்டரே சிரிப்பால் அதிருகிறது. பெரிதும் எதிர்பாத்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் காமெடிகள் எதுவுமே ஒர்க்அவுட்டாகவில்லை.

யுவாவின் ஒளிப்பதிவில் பேய் காட்சிகள் பிரமாண்ட திகில் கிளப்புகின்றன. சித்தார்த் விபின் இசை ஓகே ரகம். குறிப்பாக சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் இருவரும் வரும்போது ஒலிக்கும் பி.ஜி.எம்மில் அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

பேய்ப் படங்களுக்கென்றே காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாழடைந்த பங்களாவில் நடக்கும் கதைதான் என்றாலும், கதையின் ஒன்லைனிலும், அதற்கான ஃப்ளாஷ்பேக்கிலும், டெக்னிக்கல் மேக்கிங்கிலும் அசத்தியிருக்கிறார் இயக்குநர் தரணிதரன். கொஞ்சம் சுவாரஸ்யமாக ஆரம்பித்து, சிபிராஜின் விசாரணை தொடங்கியதும் சூடுபிடிக்கும் கதை, யோகி பாபும், கருணாகரனும் கதைக்குள் வந்ததும் காமெடியில் அடித்து தூள் கிளப்புகிறது.

முதல்பாதி திரைக்கதையை கச்சிதமாகவும், கலகலப்பாகவும் அமைத்த இயக்குநர், இரண்டாம்பாதியில்… ஃப்ளாஷ்பேக்கிற்குப் பிறகு கதையை எப்படி நகர்த்துவது, ரசிகர்களை சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடிக்காட்சிகளை எப்படி உருவாக்குவது என ரொம்பவே திணறியிருக்கிறார். சில லாஜிக் மீறல்களும் கதை இடிக்கிறது. அதை தவிர்த்து இரண்டாம் பாதியில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் இந்த ‘ஜாக்சன் துரை’ துரையாக வலம் வந்திருப்பான்.

Related posts